மாமியார் வீட்டுக்குவர மறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன்
இந்தியா தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டத்தில் உள்ள கோட்டபல்லி மண்டலத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப மறுத்த மனைவியின் பெற்றோர் வீட்டிற்குத் திங்கள்கிழமை சென்ற கணவன், இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இத்தாக்குதலில் மமதா என்ற பெண்ணின் மூக்கின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். அவருக்கு ஆரம்பச் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக வாரங்கலில் உள்ள எம்.ஜி.எம் (MGM) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கோட்டபல்லி மண்டலத் தலைமையகத்தைச் சேர்ந்த மமதாவிற்கும், மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த எனகண்ட்ல மணிசந்தர் என்பவருக்கும் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தம்பதியிடையே கடந்த சில காலமாக மனக்கசப்பு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தாக்குதலுக்கு சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை அடுத்து, மமதா தன் கணவர் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கணவர் மணிசந்தர் அவரை மீண்டும் வீட்டிற்கு வருமாறு பலமுறை அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார்.
இந்நிலையிலேயே திங்கள்கிழமை மாமனார் வீட்டிற்குச் சென்ற மணிசந்தர், மமதாவின் தந்தை நாராயணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மோதலின் போது நாராயணாவை மரக்கட்டையால் தாக்கியதில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு உண்டானது.
இத்தாக்குதலைத் தடுக்க மமதா முற்பட்டபோது, மணிசந்தர் அவரையும் தாக்கி மூக்கை பலமாகக்கடித்துள்ளார். இதில் மமதாவின் மூக்கின் ஒரு பகுதி துண்டானது.
அங்கிருந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக மமதாவிற்கு முதலுதவி அளித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வாரங்கல் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கோட்டபல்லி உதவி ஆய்வாளர் இராஜசேகர் உறுதிப்படுத்தியுள்ளார்.




