காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கை அரசு பயங்கரவாதம் – மலேசிய பிரதமர் சுட்டிக்காட்டு
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை “அரசு பயங்கரவாதம்” (state terrorism) என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அன்வர் இப்ராஹிம், NDTV ஊடகத்தின் விஷ்ணு சோமுக்கு அளித்த நேர்காணலில், காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை எவ்விதத் தயக்கமுமின்றி நிபந்தனையற்ற முறையில் கண்டித்தார்.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் “ஆக்கிரமிப்பிற்கு” முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், “ஹமாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. ஆனால் பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு 70 ஆண்டுகால வரலாற்றுடையது.
மலேசியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே ஆக்கிரமிப்பின் வலியை நன்கு அறிந்தவை. எனவே, பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எங்களால் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது,” எனவும் கூறினார்.
“தொடர்ச்சியான குண்டுவீச்சுகளும் படுகொலைகளும் கொடூரமானவை. காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அப்பட்டமான அரசு பயங்கரவாதமாகும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.




