22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு மஹிந்த கடும் எதிர்ப்பு
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் அல்ல என்றும், இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளே ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதை விடவும், மக்களுக்காக இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. அந்தப் பணிகளை முதலில் செய்து முடித்துவிட்டு, அதன் பின்னர் எந்தவொரு திருத்தத்தையும் கொண்டுவரலாம்.
22ஆவது திருத்தம் என்பது தற்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. அவசியமான மற்றும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிப்பதில்லை; அவை பற்றிப் பேசுவதும் இல்லை.
தற்போது மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மக்கள் உண்பதற்குக்கூட வழியின்றித் தவித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டறியாமல், தேவையற்ற விடயங்களில் கவனம் செலுத்தினால் மேலும் பல பிரச்சினைகளே உருவாகும்” என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.




