பிரான்ஸ் வன்முறையை இலங்கையுடன் ஒப்பிடுகிறது மஹிந்த அணி
பிரான்ஸில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற நிலைமையை உருவாக்கி, தேர்தலை நடத்தாமல் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கக்கூடும் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரான்ஸில் தற்போது இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் முக்கிய கட்டடங்களுக்குத் தீ வைக்கப்படும் சம்பவங்கள் போன்றவை இலங்கையிலும் இடம்பெறக்கூடுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த சாகர காரியவசம்,
“இலங்கையின் கலாசாரக் கட்டமைப்புகளுக்கு அமைய, தானாகவே அவ்வாறானதொரு நிலைமை உருவாகாது. ஆனால், அவ்வாறானதொரு நிலைமையை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கத்தால் முடியும்.
ஏனெனில், பெருமளவு பணம் செலவிடப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, கடந்த காலத்தில் அதேபோன்றதொரு ‘அறகலய’ போராட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னணியில் என்ன இருந்தது என்பது தெரியாமல் மக்கள் அதில் பங்கேற்றனர்.
இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்டதே ‘அறகலய’. இதற்கு முன்னர் இலங்கையில் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதில்லை.
அத்தகையதொரு நிலைமையை உருவாக்கி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியைச் சீர்குலைத்து, தீவிரவாத அரசாங்கமொன்றை உருவாக்கி, அதன் ஊடாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கக்கூடும்.
ஏனெனில், தேர்தலொன்று நடத்தப்பட்டால், இந்த அரசாங்கத்துக்கு 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும்.
பிரான்ஸில் ஏற்பட்டதைப் போன்றதொரு நிலைமை இலங்கையில் இயல்பாக உருவாகாது. ஆனால், இந்த அரசாங்கம் அவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கக்கூடும் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது” எனத் தெரிவித்தார்.





