அதிர்ந்தது அரங்கம்: கொலம்பியா வெற்றிநடை
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ‘கே’ பிரிவு (Group K) லீக் ஆட்டத்தில், அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி தனது உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றியோடு தொடங்கியுள்ளது.
மெக்சிகோ சிட்டியின் புகழ்பெற்ற Estadio Azteca மைதானத்தில் 80,000-க்கும் அதிகமான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் இந்த விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது.
இத்தாலியின் முன்னாள் நட்சத்திர வீரர் பாபியோ கன்னவாரோவின் (Fabio Cannavaro) பயிற்சியின் கீழ் களம் கண்ட உஸ்பெகிஸ்தான் அணி, ஆரம்பத்தில் பலமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.
எனினும், கோபா அமெரிக்கா தொடரின் ரன்னர்-அப்பான கொலம்பியாவின் அசாத்திய ஆட்டத்திறனுக்கு முன்னால் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியா தனது முதல் கோலை அடித்தது.
நட்சத்திர வீரர் லூயிஸ் டயஸ் (Luis Diaz) கொடுத்த அபாரமான பாஸை (Pass), டேனியல் முனோஸ் (Daniel Munoz) லாவகமாக கோலாக மாற்றினார்.
இதனால் மைதானமே கொலம்பிய ரசிகர்களின் “வாமோஸ் கொலம்பியா” (Vamos Colombia) என்ற கோஷத்தால் அதிர்ந்தது.
இரண்டாவது பாதியில் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் அணி உலகக் கிண்ண வரலாற்றில் தனது முதல் கோலை பதிவு செய்து அசத்தியது.
ஷொமுரோடோவ் அடித்த பந்தை கொலம்பிய கோல்கீப்பர் வர்காஸ் தடுத்த போதிலும், அவரிடமிருந்து நழுவிய பந்தை உஸ்பெகிஸ்தானின் பைசுல்லேவ் (Fayzullaev) மிக அருகிலிருந்து ஹெடர் (Header) மூலம் கோல் போஸ்ட்டிற்குள் திணித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
ஆனால், உஸ்பெகிஸ்தானின் இந்த மகிழ்ச்சி 5 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. 65-வது நிமிடத்தில் கஸ்டாவோ புவேர்ட்டா கொடுத்த பந்தை, லூயிஸ் டயஸ் கோலாக்கி கொலம்பியாவை மீண்டும் 2-1 என முன்னிலைப்படுத்தினார்.
அதன்பின்னர் ஆட்டத்தை சமன் செய்ய உஸ்பெகிஸ்தான் கடுமையாகப் போராடியது.
அவர்களின் சில முயற்சிகள் கோல் போஸ்ட்டில் பட்டுத் திரும்பின. இறுதியாக, கூடுதல் நேரத்தின் 9-வது நிமிடத்தில் (90+9′) கொலம்பியாவின் ஜமிண்டன் காம்பாஸ் (Jaminton Campaz) அணியின் 3-வது கோலை அடித்து கொலம்பியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ண குரூப் போட்டிகளில் தனது பலத்தை கொலம்பியா மீண்டும் நிரூபித்துள்ளது.




