பளை காட்டில் புலிகளின் பயிற்சி முகாம்: வதந்தி பரப்பிய நபரின் மறுமுகம் அம்பலம்
கிளிநொச்சி- பளை வனப்பகுதியில் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாமோ அல்லது குண்டு தயாரிப்பு நிலையமோ இயங்கவில்லை என்பது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே திட்டமிட்ட அடிப்படையில் இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கவோ அல்லது இனவாதம், மதவாதத்தைப் பரப்புவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என உறுதியளித்த அமைச்சர், நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” பொறுப்பற்ற வகையில் திட்டமிட்ட அடிப்படையில் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் போலித் தகவலை வெளியிட்ட சந்தேகநபர், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் அவர் ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடி வழக்குகள் உட்பட மூன்று வெவ்வேறான குற்றவியல் வழக்குகளில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அவர், தன்னை ஒரு மருத்துவர் எனப் போலியாகக் காட்டிக்கொண்டுள்ளார். அத்துடன், அவர் கூறிக்கொள்ளும் மனித உரிமைப் பதவியானது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அமைப்பாலும் வழங்கப்பட்டது அல்ல.
செய்தியாளர் சந்திப்பில் அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து, கிளிநொச்சியிலுள்ள குறித்த இடத்திற்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நேரில் சென்று சோதனையிட்டனர்.
அங்கு புலிகளின் பயிற்சி முகாமோ அல்லது குண்டு தயாரிப்பு நிலையமோ இயங்கியதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. மாறாக, அது ஒரு பயிர்ச்செய்கை நிலம் மட்டுமே என்பது உறுதியானது. இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கிலேயே அவர் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளார்.
உண்மையில், 10 ஏக்கர் நிலப்பரப்பை 20 ஏக்கராக விரிவுபடுத்தி விவசாயம் செய்யப்பட்ட பகுதி தொடர்பிலேயே இந்தச் சர்ச்சை உருவாக்கப்பட்டுள்ளது.
பளை வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலமே இவ்வாறு விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தியாகராஜா உட்பட மேலும் நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அது அரசுக்குச் சொந்தமான இடம் என அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில், அது தமது சகோதரருக்குரிய இடம் என அவர்கள் கூறுகின்றனர். இது குறித்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன், சோதனை நடவடிக்கைகளுக்காகச் சென்ற விசேட அதிரடிப்படையினருக்கு இடையூறு விளைவித்தமை உட்படச் சட்டரீதியாக ஏழு வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனவே, வனப்பகுதியில் நடப்பது பற்றி அரசாங்கத்திற்குத் தெரியாது என்றும், அரசாங்கம் மௌனம் காக்கின்றது என்றும் வதந்திகளைப் பரப்பி, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே சந்தேகநபர் முயன்றுள்ளார்” என அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தினார்.




