ஆஸ்திரேலியாவில் ரஷ்ய உளவாளி கைது: விசாரணை தீவிரம்
ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர்.
27 வயதான அந்நபர் நேற்று பிரிஸ்பேனின் மேல்பகுதியில் உள்ள சம்னர் (Sumner) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். எனினும், அவர் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்டு வெளிநாட்டுத் தலையீட்டில் ஈடுபட முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று பிரிஸ்பேன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விவரங்களை பொலிஸார் இன்று பின்னிரவில் கன்பராவில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் ரஷ்யா வெளிநாட்டுத் தலையீடுகளில் ஈடுபடுவதாக பொலிஸார் குற்றம் சாட்டுவது இது முதன்முறையல்ல.
ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனுக்கு மிகவும் ஆதரவாகச் செயல்படும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா விளங்குவதுடன், கடந்த நான்கு ஆண்டுகளில் இராணுவ, பொருளாதார மற்றும் மனிதநேய உதவிகளுக்காக சுமார் 1.8 பில்லியன் டாலர்களை அந்நாட்டிற்கு வழங்கியுள்ளது.
இது ஆஸ்திரேலியாவில் ரஷ்ய உளவு நடவடிக்கைகளின் தீவிர அதிகரிப்புடன் ஒத்துப்போவதாகத் தெரிகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டில், ரஷ்யாவில் பிறந்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தம்பதியரான கிரா மற்றும் இகோர் கொரோலேவ் (Kira and Igor Korolev) ஆகியோர் கைது செய்யப்பட்டு, நாட்டின் அரசு ரகசியங்களைச் சேகரித்து ரஷ்யாவிற்கு அனுப்ப முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
கடந்த ஜூன் மாதம், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ‘உளவு பார்க்க சதி செய்தல்’ என மாற்றப்பட்டு வலுவாக்கப்பட்டன.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில், பெயர் குறிப்பிடப்படாத ஒரு நாட்டின் “உளவு நெட்வொர்க்கை” ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றியதாக ஆஸ்திரேலிய உளவு அமைப்பின் (ASIO) இயக்குநர் மைக் பர்கெஸ் (Mike Burgess) தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலியர்களை ரகசியமாகத் தங்கள் பக்கம் ஈர்த்து, உணர்திறன் மிக்க தகவல்களைத் திருட அவர்கள் முயன்றதாகக் கூறப்பட்டது.




