சிட்னி விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறி? 3 வாரங்களுக்குள் 4ஆவது அசம்பாவிதம்
ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களுக்குள் இடம்பெறும் நான்காவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மேல், கோல்ட் கோஸ்ட்டிலிருந்து வந்த குவாண்டாஸ் (Qantas QF589) விமானம் ‘லிமா’ டாக்ஸிவே வழியே சென்று கொண்டிருந்தது.
அதே நேரத்தில், மெல்போர்ன் செல்லவிருந்த மற்றொரு குவாண்டாஸ் (QF405) விமானத்திற்கும் அதே டாக்ஸிவேயில் நுழைய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை (Air Traffic Control) அனுமதி அளித்துள்ளது.
எதிரே வந்த விமானத்தைக் கவனித்த மெல்போர்ன் விமானத்தின் விமானிகள், உடனடியாக விமானத்தை நிறுத்தி அசம்பாவிதத்தைத் தவிர்த்துள்ளனர்.
இச்சம்பவத்தை ‘பாதுகாப்பு விபத்து’ (Safety Incident) என வகைப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (ATSB), விமானிகளுக்கு முரண்பாடான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அறிவுறுத்தலின்படியே தமது விமானங்கள் இயங்கியதாகக் கூறியுள்ள குவாண்டாஸ் நிறுவனம், இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 3 வாரங்களில்
நடந்த சம்பவங்கள்
ஜூலை 27: குவாண்டாஸ் 737 விமானம் ஒன்று ஓடுபாதையைக் கடக்க முற்பட்ட போது, அதே ஓடுபாதையில் மற்றொரு குவாண்டாஸ் லிங்க் (QantasLink) விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது.
ஆகஸ்ட் (2-வது வாரம்): இழுத்துச் செல்லப்பட்ட போயிங் 777 விமானத்தின் மீது மோதாமல் இருக்க ஜெட்ஸ்டார் (Jetstar) விமானம் சட்டென பிரேக் பிடித்ததில், அதன் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
அதே நாளில்: வெர்ஜின் (Virgin) விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டு, சிறிது நேரத்திலேயே அது ரத்து செய்யப்பட்டது. ஏனெனில், அதே ஓடுபாதையில் 1,200 மீட்டருக்கு முன்னால் மற்றொரு குவாண்டாஸ் விமானம் கடக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவங்கள் அனைத்திற்கும் இடையே பொதுவான காரணிகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும், தனித்தனியாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ATSB மற்றும் ஆஸ்திரேலிய விமான சேவைகள் அமைப்பு (Airservices Australia) தெரிவித்துள்ளன.




