இடைக்கால ஒப்பந்தம் தோல்வியடைய அமெரிக்காவே காரணம்
ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமைக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேவேளை, ஒப்பந்தத்தை எட்டுவதற்கான புதிய முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் அரச தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட உரையின்போது கருத்துத் தெரிவித்த பெசெஷ்கியான், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில், அமெரிக்கா அதனைச் சீர்குலைத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
“நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தோம். அமெரிக்கர்கள் அனைத்தையும் குழப்பிவிட்டனர். இருப்பினும், ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றே நான் இன்னமும் கருதுகின்றேன்” என அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகக் கூறப்படும் நிலையிலும், ஒப்பந்தத்தை எட்டுவதற்கான புதிய முயற்சிக்கு ஈரான் ஜனாதிபதி ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நீடிக்கும் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது.




