உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஈரான் தீவிர முயற்சி

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

அதேவேளையில், தன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கிய போர், ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது எவ்வித முன்னேற்றமுமின்றி முடங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட பூர்வாங்க போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, அமைதிக்கான தூதரக முயற்சிகளிலும் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஆகஸ்ட் மாதத்தில் தற்காலிகமாக குறைந்திருந்த ராணுவ மோதல்கள் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் இரண்டின் மீது ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ (IRGC) பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சனிக்கிழமை ஈரானின் மூன்று எண்ணெய் தாங்கி கப்பல்களை தாக்கி அழித்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், “காலம் கடந்துபோவதற்குள் ஆட்டத்தின் விதிகள் மாறிவிட்டதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“இனிவரும் நாட்களில் ஈரானின் நலன்களுக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ எதிராக நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் மிக விரைவான, கடுமையான மற்றும் வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் புதிய கட்டுப்பாட்டு மண்டலம்

ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) வெளியே புதிய கட்டுப்பாட்டு மண்டலம் உருவாக்கப்படும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தெரிவித்துள்ளார்.

பாரசீக வளைகுடாப் பகுதிகளையும் உள்ளடக்கிய இப் பகுதிக்குள் நுழையும் எந்தவொரு கப்பலும் பொருளாதாரத் தடைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் நடைபெறும் முக்கியமான சர்வதேச கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் திறனை ஈரான் இன்னும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அதேவேளையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுத்து அதன் பொருளாதாரத்தை முடக்குவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஈரானுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

நாட்டின் பிரதானப் போர் தற்போது பொருளாதார உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைச் சுற்றியே அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட சபாநாயகர் கலிபாப், பணவீக்கம், வேலையின்மை மற்றும் நாணய மதிப்பு இறக்கம் போன்ற சவால்களை அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் எனக் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தகுந்த சீர்திருத்தங்கள் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றும், தடைகளுக்குப் பயந்து ஈரான் தனது முடிவுகளை மாற்றிக்கொள்ளாது என்றும் அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் அலி மதனிஸாதே தெரிவித்துள்ளார்.

ஈரானின் “பொருளாதாரப் போர் தலைமையகம்” இதன் தொடர்பிலான பணிகளை இரட்டிப்பாக்கியுள்ளதாக துணை அமைச்சர் மொர்டேஸா ஜமானியான் தெரிவித்துள்ளார்.

கார்க் தீவு மீது தாக்குதல்

ஈரானின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) கடந்த காலங்களில் சுமார் 550 முறை தாக்குதலுக்கு உள்ளாகியும் தொடர்ந்து இயங்கி வருவதாக ஈரானிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சின் பக்நேஜாத் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால் உலக அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. வரவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலுக்கு மத்தியில் இது அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்குப் பெரும் அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

இருப்பினும், “ஹோர்முஸ் நீரிணை வழியாக தற்போது நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. அமெரிக்க கடற்படை இந்த மோதலில் வெற்றி பெற்று வருகிறது” என அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி