தீவிரமடையும் மத்திய கிழக்கு போர்: சவூதிமீதும் தாக்குதல்
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை அமெரிக்கப் படைகள் ஈரானிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஈரான் ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்குப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இப்போரின் முக்கிய விரிவாக்கமாக, சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள நான்கு நகரங்கள் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலில் 73 பேர் காயமடைந்ததுடன், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் தீப்பற்றி எரிந்தன.
சவூதி மீதான இத்தாக்குதல்களின் தாக்கம் உலகளாவிய எண்ணெய் சந்தையில் எதிரொலித்த நிலையில், ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அழித்ததாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (Central Command) தெரிவித்துள்ளது. அது தொடர்பான காணொளியையும் வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இருமுறை தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கர்கள் எவருக்கும் காயமோ பாதிப்போ ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொலம்பியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அவர்கள் ஒவ்வொரு முறை அவ்வாறு செய்யும்போதும் அல்லது செய்ய முயலும்போதும், தங்களது எண்ணெய் தாங்கிக் கப்பல்களை இழக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.
இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள அல்-அஸ்ரக் (Al Azraq) அருகே அமைந்துள்ள அமெரிக்கத் தளத்தின் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகத்தில் வெளியான ஐ.ஆர்.ஜி.சி. அறிக்கை தெரிவிக்கிறது.
ஜோர்தானை நோக்கிக் ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகளின் காணொளிகளையும் ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
தங்களது ஏவுகணைகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரான் கூறியபோதிலும், ஈரான் ஏவிய 20 ஏவுகணைகளில் 18 ஏவுகணைகளைத் தமது வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியதாகவும், இரண்டே இரண்டு ஏவுகணைகள் மட்டுமே ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் விழுந்ததாகவும், இதில் சேதங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் ஜோர்தான் தெரிவித்துள்ளது.




