இந்தோனேசிய காட்டுத்தீயால் பரவும் அடர் புகை: மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாகப் பரவியுள்ள அடர் புகை மூட்டம் (Haze), காற்று மாசுபாட்டை அபாயகரமான நிலைக்கு உயர்த்தியதை அடுத்து , மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
“பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் காற்று மாசுபாடு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சரவாக் மாநிலத்தின் செரியான் (Serian) பிரிவு முழுவதிலும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த மன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்” எனப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அப்பகுதியின் காற்று மாசுபடுத்தி குறியீடு (Air Pollutant Index) உள்ளூர் அவசரநிலையைக் கருத்தில் கொள்ளும் அளவை எட்டியதை அடுத்து, சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழு சமர்ப்பித்த முறையான கோரிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த அவசரநிலை உத்தரவின் கீழ், செரியான் பகுதியில் உள்ள 647 பள்ளிகள் திங்கட்கிழமை முதல் குறைந்தது அடுத்த வார இறுதி வரை மூடப்படும்.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தோட்டப் பணிகள், கட்டுமானத் தளங்கள் மற்றும் குவாரிகளின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்படுகின்றன.
அத்தியாவசிய சேவைகள் மட்டுமே தொடர்ந்து இயங்கும்.
அனுகூலமான மேகக் கூட்டங்கள் உருவாகும் என்ற வானிலை முன்னறிவிப்பைக் குறிப்பிட்டு, வியாழக்கிழமை தொடங்கப்பட்ட மூன்று நாள் செயற்கை மழை பொழியும் நடவடிக்கை (Cloud-seeding) குறைந்தது திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்படும் என மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிராந்திய அளவில் எதிரொலிக்கும் பாதிப்பு
போர்னியோ தீவின் வட பகுதியில் அமைந்துள்ள சரவாக் மாநிலம், அதன் அண்டை மாநிலங்களான சபா மற்றும் தீபகற்ப மலேசியா ஆகியவை பல வாரங்களாக இந்த அடர் புகை மூட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பாதிப்பு பிலிப்பைன்ஸிலும் எதிரொலித்துள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், நாட்டின் தலைநகர் பிராந்தியமான மெட்ரோ மணிலா மற்றும் 12-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வெள்ளிக்கிழமை வகுப்புகளை ரத்து செய்ய உத்தரவிட்டார்.




