ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசர மறுசீரமைப்பைக் கோருகிறது இந்தியா
பின்புறக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு காரை எதிர்காலத்தை நோக்கி ஓட்ட முடியாது என்று குறிப்பிட்ட இந்தியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் (UNSC) அவசரமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் 80 ஆண்டுகால பழைய அமைப்பு முறை, தற்காலத்தின் மிகக் கடுமையான உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ் (Parvathaneni Harish), ஐ.நா. பொதுப்பேரவையில் சமமான பிரதிநிதித்துவம் மற்றும் பாதுகாப்புப் பேரவை விரிவாக்கம் குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான பழைய கட்டமைப்பும் வெற்றியாளர்களின் அதிகாரமும், தற்போதைய பிரதிநிதித்துவமற்ற பாதுகாப்புப் பேரவையின் குறைகளைப் போக்க உதவாது என்று அவர் குறிப்பிட்டார்.
வரலாறு என்பது என்ன செய்யக்கூடாது என்பதற்கு வழிகாட்டியாக இருக்கலாமே தவிர, தற்கால சவால்களை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை அது தீர்மானிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், “பின்புறக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு நம்மால் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
மேலும், ஆசிய-பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டினார்.




