வடக்கு பொருளாதார ரீதியில் வலுவடைய வேண்டும்: ஆளுநர்
வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026 இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், வடக்கு கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களிடம் திறமை, உழைப்பு, புத்தாக்க சிந்தனை மற்றும் தரமான உற்பத்திகளை உருவாக்கும் ஆற்றல் என்பன ஏற்கனவே காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
எனினும், அவர்களுக்கு முன்னிலையிலுள்ள மிகப் பெரிய சவால் சந்தைப்படுத்தலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போருக்குப் பின்னர் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் முயற்சிகள் இன்று ஆயிரக்கணக்கான தொழில் முயற்சிகளாகவும் அதற்கு அப்பாற்பட்ட அளவிலும் வளர்ந்திருப்பது பெருமைக்குரியது எனக் குறிப்பிட்ட ஆளுநர்,

இந்த வளர்ச்சி வெறுமனே எண்ணிக்கையின் அதிகரிப்பாக இருக்கக் கூடாது என்றும், சிறிய தொழில் முயற்சியாளர்கள் நடுத்தர நிலையையும், நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பெரிய சந்தைகளில் போட்டியிடக்கூடிய நிலையையும் அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே சில தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவது பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட ஆளுநர், தரமான உற்பத்தி, தனித்துவமான பொதியிடல் மற்றும் சந்தைத் தேவையைப் புரிந்துகொண்ட செயற்பாடுகள் அவர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளைத் திறந்துள்ளன என்றார்.
ஒருவரால் தனியாக ஏற்றுமதிச் சந்தையை அடைய முடியாத நிலையிலும், வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கம் போன்ற அமைப்புகளின் ஊடாக கூட்டாகச் சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, தொழில் முயற்சியாளர்கள், அரச மற்றும் தனியார் துறைப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





