பிரான்ஸ்,சவுதி இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் (MBS) ஆகியோருக்கு இடையில் எலிசி (Elysee) மாளிகையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதனையடுத்து பாரிஸுக்கு அருகில் 6 பில்லியன் யூரோ ($7 பில்லியன்) செலவில் பிரம்மாண்ட கேளிக்கை பூங்கா ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை பிரான்ஸும் சவுதி அரேபியாவும் அறிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மேக்ரான் மற்றும் பட்டத்து இளவரசர் எம்.பி.எஸ் முன்னிலையில் திங்கள்கிழமை கையெழுத்தான பல முக்கிய ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும்.
பாரிஸுக்கு வடமேற்கே சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள Cergy-Pontoise பகுதிக்கு அருகில் மூன்று கருப்பொருள் (Theme) பூங்காக்கள் கட்டப்படும் என்றும், அதில் ஒன்று ‘மாங்கா’ (Manga) ஜப்பானிய அனிமேஷன் கதைகளை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் அரசு இறையாண்மை நிதியத்தின் முதலீட்டுப் பிரிவான ‘கித்தியா’ (Qiddiya) நிறுவனத்தால் வழிநடத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 22,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தை “அற்புதமானது” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மேக்ரான், இது ‘டிஸ்னிலேண்ட் பாரிஸ்’ அளவிற்கு ஒரு “புதிய உலகளாவிய சுற்றுலாத் தலத்தை” உருவாக்கும் என்றார்.
பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளுதல் தொடர்பாகவும் விருப்பக் கடிதம் கையெழுத்தாகியுள்ளது.




