‘எல் நினோ தாக்கம்’ – இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தீவிரமடைந்து வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன,
அடுத்த ஆறு மாதங்களுக்கான தரவுகளை ஆய்வு செய்ததில், இக்காலகட்டத்தில் வழக்கமான பருவகால சராசரியை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
வழக்கமாக நாட்டின் வருடாந்த மழைவீழ்ச்சியில் 30% இந்த இரண்டு மாதங்களிலேயே பதிவாகிறது. இது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், கனமழை காரணமாக நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி, சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை நாடு முழுவதும் பரவலாகப் பெய்யும். இதனால் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.
வெள்ளப்பெருக்கு கண்டிப்பாக ஏற்படும் என்று கூறிவிட முடியாது, ஆனால் அப்படி ஒரு சூழல் உருவானால் அதை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன,” என்று விஜேமான்ன தெரிவித்தார்.
அதேவேளை, எல் நினோ நிகழ்வின் தாக்கம் டிசம்பர், 2027 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தீவிரமடைந்து, மேலும் பல தீவிரமான வானிலை மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.




