இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமனம்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 2022-ஆம் ஆண்டு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய ஜோ ரூட், மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது நீண்டகாலப் பயணத்தை இந்த மாதத் தொடக்கத்தில் முடித்துக் கொண்ட ஸ்டீபன் பிளெமிங், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் (ECB) செப்டம்பர் 2030 வரை நீடிக்கும் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
நியூசிலாந்தின் முன்னாள் கேப்டனான பிளெமிங், மிடில்செக்ஸ், யார்க்ஷயர் மற்றும் நாட்டிங்ஹாம்ஷயர் அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர்.
இதில் 2005-ல் நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்குத் தலைவராகச் செயல்பட்டு கவுண்டி சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார்.
டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியாளராகத் தொடரும் பிரெண்டன் மெக்கல்லமுடன் பிளெமிங்கிற்கு நல்ல நட்புறவு உள்ளது.
ஆகஸ்ட் 19 அன்று ஹெடிங்லியில் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 53 வயதான பிளெமிங் உடனடியாகப் பொறுப்பேற்க மாட்டார்.
இடைக்காலப் பயிற்சியாளராக மார்கஸ் டிரெஸ்கோதிக் (Marcus Trescothick) செயல்படுவார்.
சிஎஸ்கே அணியுடனான 18 ஆண்டுகாலப் பயணத்தில் 5 ஐபிஎல் பட்டங்களை வென்று தந்த பிளெமிங், தற்போது தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.
டிசம்பரில் தொடங்கும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்காக அவர் இந்த கோடைகாலத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்து வருவார்.




