அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் காயம்
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பல மணி நேரம் அவசரக் கட்டுப்பாடுகள் (lockdown) விதிக்கப்பட்டன.
வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Virginia State University) ‘குவாட் அனெக்சஸ்’ (Quad Annexes) பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதில் பல சந்தேக நபர்களுக்குத் தொடர்பிருப்பதாகவும், காயமடைந்த 5 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
“வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழக காவல் துறையும் செஸ்டர்பீல்ட் கவுண்டி காவல் துறையும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன” என்று பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கிறது.




