சர்வதேச கிரிக்கெட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து அணியின் ‘வேகப் புயல்’
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான மார்க் வூட் (Mark Wood), சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதான மார்க் வூட், தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியான காயங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.
முழங்கை மற்றும் முழங்கால் அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு 15 மாதங்கள் ஓய்வில் இருந்த அவர், கடந்த நவம்பரில் பெர்த் நகரில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மீண்டும் களமிறங்கினார்.
எனினும், அப்போட்டியில் 11 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், அவரது இடது முழங்காலில் மீண்டும் வீக்கம் ஏற்பட்டது.
இதனால் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பிய அவர், அதன்பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடவில்லை.
தனது ஓய்வு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மார்க் வூட்:
“கடந்த ஓராண்டாக நிகழ்ந்தவற்றைப் பார்க்கும்போது இது பெரிய ஆச்சரியமாக இருக்காது. எனது ஒப்பந்தக் காலம் முடிவடையும் இந்தத் தருணம் ஓய்வு பெறுவதற்குப் பொருத்தமானதாக உணர்கிறேன்.
காயங்களிலிருந்து மீண்டு வந்து, மக்கள் கணித்தது தவறு என நிரூபிக்கவே நான் எப்போதும் முயன்றுள்ளேன்.
ஆனால், இந்த முறை மருத்துவ ஆலோசனைகளின்படி டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்வது சாத்தியமில்லை என்பதால், எனது போராட்டத்தை இழந்துவிட்டேன்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடியதே எனது வாழ்வின் மிகப்பெரிய கௌரவம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மார்க் வூட், 2015-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.
இங்கிலாந்து அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் 70 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட்டுகளையும், 38 T20 போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
2019 ஒருநாள் உலகக் கோப்பை (18 விக்கெட்டுகள்) மற்றும் 2022 T20 உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணிகளில் அவர் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தார்.
மேலும், 2015 மற்றும் 2023 ஆஷஸ் தொடர்களில் இங்கிலாந்தின் மறக்க முடியாத வெற்றிகளுக்கு அவரது அதிவேகப் பந்துவீச்சு பிரதான காரணமாக அமைந்தது.
ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் ஓய்வைத் தொடர்ந்து, தற்போது மார்க் வூட்டும் ஓய்வு பெற்றுள்ளமை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு சகாப்தத்தில் ஒரு முக்கிய முடிவைக் குறிப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.




