‘எல்நினோ தாக்கம்: வடக்கு, கிழக்கில் வரலாறுகாணாத வெப்பம்’
“எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.”
இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் பரவலாக உணரப்பட்டு வருகின்றது.
இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதப் பிற்பகுதியில் இலங்கையைச் சூழவுள்ள இந்து சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை 1.6 பாகை செல்சியஸ் அளவிலும், ஓகஸ்ட் மாதப் பிற்பகுதியில் அது 2.6 பாகை செல்சியஸ் அளவிலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலப்பகுதிகளில் வளி வெப்பநிலை 2.8 பாகை செல்சியஸை விடக் கூடுதலாக அதிகரிக்கக்கூடும்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் எல்நினோவின் தாக்கத்தை துல்லியமாகக் கணிப்பது சவாலானது.
ஏனெனில், இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண்ணின் தொழிற்பாடு எல்நினோவின் செல்வாக்கை எந்தளவுக்கு அனுமதிக்கும் என்பதிலேயே பாதிப்பின் வீரியம் தங்கியுள்ளது.
இருப்பினும், தற்போதைய தரவுகளின்படி வரண்ட வானிலையைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்திலிருந்து மழை பெய்யத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும்.
இந்த நிலைமை நவம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதுடன், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெள்ள இடரை ஏற்படுத்தக்கூடிய கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பால் மீன்பிடித் தொழிலும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே, இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காலபோக (பெரும்போக) நெல் விதைப்பை விவசாயிகள் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும்.
செப்டெம்பர் மாதம் வரை வரண்ட வானிலையும், ஒக்டோபர் மற்றும் நவம்பரில் வெள்ளப் பெருக்குடனான கனமழையும் எதிர்பார்க்கப்படுவதால், விழிப்புணர்வுடன் கூடிய முறையான திட்டமிடல் அவசியமாகும்.” – என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




