டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 5 அதிகாரிகள் பணி நீக்கம்
டெல்லியில் மாணவர் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேரை இடைநீக்கம் செய்து டெல்லி அரசு உத்தரவிட்டது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
மேலும், 5 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்குள்ளான கட்டிடத்தில் இன்னும் சில மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதால் 2-வது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்தன.
முதல்வர் ரேகா குப்தா நேற்று நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதும், 50 ஆண்டுகள் பழமையான அந்தக் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளுமே விபத்துக்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.
“விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும், கட்டிட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
விபத்து தொடர்பாக மாநகராட்சி துணை ஆணையர், செயல் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் ஆகிய 5 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
கட்டிட உரிமையாளரான 81 வயதான ஹரிராம் குப்தா நேற்று ராஜஸ்தானின் பிவாடி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது மனைவியையும் மகனையும் போலீஸார் கைது செய்தனர்.




