ஈரான் பக்கம் முழுமையாக நிற்க சீனா தயங்குவது ஏன்?
ஈரானியப் பொருளாதாரத்தை முடக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளைத் தடுக்கும் பொருளாதார வலிமை கொண்ட ஒருசில நட்பு நாடுகளில் ஒன்றாகச் சீனா நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய போக்கிற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், ஈரானைப் பாதுகாப்பதற்காகத் தனது எல்லைகளைத் தாண்டி பொருளாதார உதவிகளை சீனா வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல்களையும் பொருளாதாரத் தடைகளையும் பெய்ஜிங் எதிர்த்தாலும், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் உட்படப் பல நாடுகளுடன் தனது வெளியுறவுக் கொள்கையைச் சமநிலையில் பேணவே சீனா விரும்புகிறது.
எனவே, எந்தச் சூழலிலும் ஈரானியத் தலைமைக்கு முழு ஆதரவை வழங்கித் தன்னைப் பிணையாக வைக்க சீனா தயங்குகிறது.
இது குறித்து சீனாவில் உள்ள ஷாவோசிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹோங்டா பேன் கூறுகையில்,
“பரந்த உலகளாவிய நலன்களைக் கொண்ட சீனாவால், அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலைத் தணிக்க மட்டுமே தீவிரமாக உதவ முடியும். ஈரானுக்காக அமெரிக்காவுடன் சீனா ஒருபோதும் நேரடியாகக் கடுமையான மோதலில் ஈடுபடாது; ஈடுபடவும் முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
வர்த்தக உறவும் எதார்த்த நிலையும்
சீனாவும் ஈரானும் குறிப்பாக ஆற்றல் துறையில் வலுவான வர்த்தகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொண்டாலும், இந்த உறவில் சீனாவை விட ஈரானே அதிகளவில் சீனாவைச் சார்ந்திருக்கிறது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைச் சீனாவே கொள்முதல் செய்து ஈரானியப் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கியுள்ளது.
இருப்பினும், ஈரானிய எண்ணெய் என்பது சீனாவின் ஒட்டுமொத்த ஆற்றல் தேவையில் வெறும் 2 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பயந்து சினோபெக் (Sinopec) மற்றும் பெட்ரோசைனா (PetroChina) போன்ற சீனாவின் மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்வதைத் தவிர்த்து வருகின்றன.
சர்வதேச டாலர் அமைப்போடு தொடர்பு இல்லாத சிறிய தனியார் நிறுவனங்கள் மட்டுமே இதில் ஈடுபட்டு வருகின்றன.
2021-ஆம் ஆண்டில் கையெழுத்தான 25 ஆண்டுகால மூலோபாயக் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ், ஈரானில் 400 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யச் சீனா உறுதியளித்த போதிலும், அமெரிக்காவின் தடைகள் மற்றும் ஈரானின் சிக்கலான நிர்வாக நடைமுறைகள் காரணமாகப் பெரும்பாலான திட்டங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதே தற்போதைய எதார்த்த நிலையாகும்.




