சீனாவின் முக்கிய இரு பிரமுகர்கள் பதவிகளில் இருந்து நீக்கம்
சீனாவின் மத்திய ராணுவ ஆணைக்குழு (Central Military Commission) பதவிகளிலிருந்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான ஜாங் யோக்சியா (Zhang Youxia) மற்றும் லியூ ஜென்லி (Liu Zhenli) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரச ஊடகமான சின்ஹுவா (Xinhua) வெள்ளிக்கிழமை இன்று வெள்ளிக்கிழமை மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக, மத்திய இராணுவ ஆணைக்குழுவின் துணைத் தலைவராகவும், சீனாவின் சக்திவாய்ந்த அரசியல் பீடத்தின் உறுப்பினராகவும் இருந்த ஜாங் மற்றும் மத்திய இராணுவக் ஆணைக்குழுவின் உறுப்பினர் லியூ ஆகியோர் மீது, சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு ஆகிய இரண்டிற்கும் தனித்தனியாக மத்திய இராணுவக் குழு கட்டமைப்பு இயங்கி வருகின்றது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பானது, அரசின் மத்திய இராணுவக் குழுவில் அவர்கள் வகித்த பதவிகளை மட்டுமே குறிக்கிறது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய இராணுவக் குழுவில் உள்ள அவர்களின் பதவிகளிலிருந்து அவர்கள் இன்னும் உத்தியோக பூர்வமாகவோ அல்லது பகிரங்கமாகவோ நீக்கப்படவில்லை.




