செம்மணி புதைகுழி குறித்து மக்கள் மத்தியில் அச்சம்
“இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.”
இவ்வாறு மேற்படி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று வரை மொத்தமாக 380 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒட்டுமொத்தப் புதைகுழியாக மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழியே முதலிடத்தில் காணப்படுகின்றது.
அந்த அடிப்படையில் நோக்கினால், தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டு வரும் என்புத் தொகுதிகளின் எண்ணிக்கையின் படி, செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையின் இரண்டாவது பெரிய அகழ்வுத் தளமாகவே தற்சமயம் காணப்படுகின்றது.
ஆயின், திட்டமிட்டு மனித உடல்கள் புதைக்கப்பட்ட ‘அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி’ என்ற சட்ட ரீதியான கோணத்தில் பார்த்தால், செம்மணி மனிதப் புதைகுழியே இலங்கையின் மிக அதிக எண்ணிக்கையான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழித் தளமாக இன்று உருவெடுத்துள்ளது.
குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வளவு அதிகமான எலும்புக்கூடுகள் இங்கு கண்டெடுக்கப்படுகின்றமை சாதாரணமான ஒன்றல்ல.
இது இப் பிரதேச மக்கள் மத்தியிலும், குறிப்பாகத் தங்களது உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மத்தியிலும் மிகப்பாரிய சந்தேகங்களையும், அச்ச உணர்வையும் தோற்றுவித்துள்ளது.
எவ்வாறெனினும், இப்பகுதியின் ஒட்டுமொத்த அகழ்வுப் பணிகளும் நிறைவடைந்து, முறையான அறிவியல் மற்றும் சட்டபூர்வ விசாரணைகள் முழுமையாக முற்றுப்பெற்ற பின்னரேயே, இது சம்பந்தமான இறுதி முடிவுகளையும் உண்மைகளையும் எம்மால் துல்லியமாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.” – என்றார் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் .




