ஆஸ்திரேலியாவில் பறவைகள் மர்மமாக உயிரிழப்பு: விசாரணை தீவிரம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் உள்ள ‘மெனிண்டி லேக்ஸ்’ (Menindee Lakes) பகுதியின் காவண்டிலா ஏரியில் (Lake Cawndilla) சுமார் 400 இளம் பெலிகன் (Pelican) பறவைகள் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்த பறவைகள் இறப்பிற்கு எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் காரணம் அல்ல என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலியலாளர் டேமியன் குக் (Damien Cook) என்பவர் படகுச் சவாரி மேற்கண்டபோது, இந்த பெலிகன் பறவைகள் கொத்துக் கொத்தாக இறந்து கிடப்பதாக முதன்முதலில் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.
பறவைக் காய்ச்சல் பரவல் குறித்த அச்சம் நிலவிய சூழலில், மாதிரிப் பரிசோதனைகள் மூலம் அந்த வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது பெரும் நிவாரணத்தை அளித்துள்ளதாக மாநிலத் துணை தலைமை கால்நடை அதிகாரி ரைஸ் பவல் (Rhys Powell) தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த பறவைகளின் இறப்பிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய மேலும் சில வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொட்யூலிசம் (Botulism) போன்ற பிற நோய்த்தொற்றுகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், உள்நாட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனைகள் மற்றும் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 236 பேருக்கு H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு தடுப்பூசி விநியோகத்தை முன்னெடுத்து வருகிறது. எனினும், இரு முறை தடுப்பூசி செலுத்த வேண்டியிருப்பதால் வனவிலங்குப் பறவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரேனும் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளைக் கண்டால் அவற்றுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதைத் தவிர்க்குமாறும், உடனடியாக அவசர விலங்கு நோய் உதவி எண் (1800 675 888) மூலம் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




