ஈரான் நிதியை கையாளும் வங்கிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானிய நிதியைக் கையாளும் நிதியமைப்புகள் டொலர் அடிப்படையிலான சர்வதேச நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்படக்கூடும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் நிதித் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறி, எகிப்தின் ‘பங்க் மிஸ்ர்’ (Banque Misr) வங்கியின் ஐக்கிய அரபு அமீரகக் கிளைகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா அபராதம் மற்றும் தடைகளை விதித்தது.
இதனைத் தொடர்ந்து, ஈரானுக்குப் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் வாரந்தோறும் புதிய இரண்டாம் நிலைத் தடைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஞாயிற்றுக்கிழமை Reuters செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பெசென்ட் கூறினார்.
அமெரிக்காவின் வட கரோலினாவிலுள்ள ஆஷ்வில்லி (Asheville) நகரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் நிதித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதாகப் பேசிய அவர்,
“ஒவ்வொரு வாரமும் இதுபோன்ற பல கடுமையான நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். நாங்கள் வங்கிகளிலிருந்தே இதைத் தொடங்குகிறோம். ஈரானிய நிதியை வைத்திருப்பதோ அல்லது அந்நாட்டு அரசாங்கத்திற்கு உதவி செய்வதோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை வங்கிகளுக்குத் தெளிவுபடுத்துகிறோம்” என்று குறிப்பிட்டார்.




