அரபிக்கடல் மோதல்: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா
அரபிக்கடலில் இந்திய மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மோதிய சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளதுடன், வழமை போல உண்மையை மறைக்க பாகிஸ்தான் முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
வட அரபிக்கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் ‘ஐ.என்.எஸ் கொல்கத்தா’ (INS Kolkata) போர்க்கப்பலை நோக்கி, பாகிஸ்தானின் ‘பி.என்.எஸ் ஹுனைன்’ (PNS Hunain) கப்பல் மிகவும் ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பின் போது தெரிவித்ததாவது:
“நாங்கள் அளித்த தூதரக அளவிலான எதிர்ப்பிற்கு பாகிஸ்தான் அளித்துள்ள பதில், வழக்கம் போல் உண்மையை திசை திருப்பும் முயற்சியாகும்.
அவர்களின் குற்றச்சாட்டுகளை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்.
1991 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே கையெழுத்தான இராணுவப் பயிற்சிகள் மற்றும் நகர்வுகள் தொடர்பான ஒப்பந்தத்தின் 10 ஆவது விதியின்படி, கடலில் இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்களும் குறைந்தபட்சம் 3 நௌடிகல் மைல் இடைவெளியைப் பேண வேண்டும்.
ஆனால் பாகிஸ்தான் கப்பல் இந்த விதியையும், சர்வதேச கடல்சார் மோதல் தடுப்பு விதிகளையும் மிக மோசமாக மீறியுள்ளது.” – என்றார்.
இந்த மோதலால் ‘ஐ.என்.எஸ் கொல்கத்தா’ கப்பலுக்கு பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அது தொடர்ந்தும் கடலில் தனது பணியை முன்னெடுத்து வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
அதேவேளை, பாகிஸ்தான் கப்பல் சேதமடைந்து துறைமுகத்திற்குத் திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




