அனோஜனின் மரண தண்டனை ரத்து; தமிழரசுக் கட்சி வரவேற்பு
சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை தொடர்ந்து, இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இந்தச் செய்தி அனோஜனின் குடும்பத்தினருக்கும், அவருக்காக அயராது பாடுபட்ட அனைவருக்கும் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள அரசுகள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியையும் ஒற்றுமையையுமே இந்த வெற்றி பிரதிபலிக்கின்றது.
இந்த முன்னேற்றத்தை நாம் வரவேற்றாலும், எமது முயற்சிகள் இத்துடன் முடிவடையவில்லை. தேவையான அனைத்துச் சட்ட நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்டு, அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்படும் நாளிலேயே எமது முயற்சி முழுமை பெறும்.
அனோஜனை இயன்றளவு விரைவாகவும் பாதுகாப்பாகவும் நாடு திரும்பச் செய்வதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர் தனது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணையும் நாளே நாம் உண்மையாகக் கொண்டாட வேண்டிய நாள்.” – என்றுள்ளது.





