தெல்லிப்பழை வைத்தியசாலையை மத்திய அரசின்கீழ் கொண்டுவர இணக்கம்
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை எதிர்காலத்தில் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கும், அதுவரையான நிலைமாற்றுக் காலத்தில் இரு நிர்வாகங்களும் இணைந்து செயற்படுவதற்குப் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் மத்திய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட குழுவினரின் பங்கேற்புடன் இன்று (20.10.2026) செவ்வாய்க்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமையை மேம்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனக் குறிப்பிட்டார்.
மருத்துவமனையின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்குப் பெருமளவு நிதி தேவைப்படுவதுடன், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நோயாளர்கள் வருகை தரும் நிலையில், அதன் சேவைகளையும் வசதிகளையும் மேம்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.
மாகாண சபைக் காலத்தில் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டம் காரணமாக, மாகாண மருத்துவமனைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை மாத்திரம் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட குழுவினர், ஏனைய புற்றுநோய் மருத்துவமனைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள போதிலும், தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையுடன் இருப்பதால் நிதி ஒதுக்கீடு மற்றும் நடைமுறை நிர்வாக நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.




