பிரிக்ஸ் மாநாடு: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை முன்னிட்டு, டெல்லி பொலிஸார் நகரம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.
மாநாட்டின் பாதுகாப்பிற்காக 7,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 4,800க்கும் மேற்பட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, டெல்லியின் முக்கியப் பகுதிகள் மற்றும் மாநாடு நடைபெறும் இடங்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு டெல்லி போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் சிறப்புப் படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பிரிக்ஸ் மாநாடு 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக நாளை முதல் தலைவர்கள் டெல்லி வரவுள்ளனர்.




