இலங்கையில் 11 லட்சம் வழக்குகள் தேக்கம்: சபாநாயகரிடம் முக்கிய பிரேரணை கையளிப்பு
” வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தரவு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே, வழக்குகள் தேங்குவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நிரந்தரத் தீர்வுகளைத் தேடுவதும், சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கும் அத்துடன் சிறைச்சாலைக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய நிரந்தரத் தீர்வுகளை உடனடியாக முன்மொழிவதற்கும் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.”
இவ்வாறு கோரிக்கை விடுத்து, சபாநாயகரிடம் இன்று (04) எதிர்க்கட்சி தலைவர் பிரேரணையொன்றை கையளித்தார்.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ள அப்பிரேரணையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
” வழக்குகளின் எண்ணிக்கைக்கு நிகராக நீதிபதி வெற்றிடங்கள் நிரப்பப்படாமை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை போதியளவில் இல்லாமை, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் மற்றும் அரச மதிப்பீட்டு அறிக்கைகள் தாமதமடைதல் என்பன இந்த வழக்குத் தாமதங்களுக்குக் காரணமென்பது தெளிவாகத் தெரிகிறது.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் அதிகளவிலான அரச பணிகள் குவிந்து கிடப்பதும், அந்தத் திணைக்களத்தின் ஊடாக இடம்பெறும் தாமதங்கள் குறித்த பிரச்சினைக்குரிய நிலைமைகளின் தொடர்ச்சியும் இப் பிரச்சினைக்குக் காரணமாகுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமா அதிபர் திணைக்களத்திலுள்ள தாமதங்கள் குறித்துப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அது நீதிமன்ற முறைமையின் தாமதங்களுக்குப் பிரதான தடையாக இனங்காணப்பட்டுள்ளது.
அதேபோன்று அண்மைக் காலப்பகுதியில் சிறைச்சாலை மோதல்கள் சிலவற்றை நாம் கேள்விப்படக் கூடியதாக இருந்ததுடன், அதற்கும் இந்த வழக்கு நடவடிக்கைகள் தாமதமடைவதே காரணமென்பது தெளிவாகத் தெரிகிறது.
இலங்கை முழுவதிலுமுள்ள மொத்தச் சிறைச்சாலைகளில் 10,000 கைதிகளுக்கே இடவசதியுள்ளது. எவ்வாறாயினும், இத்தருணத்தில் அந்தச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 40,000க்கும் அதிகமாகும். அதற்கமைய அவர்களின் தனிப்பட்டத் தேவைகள், உணவு மற்றும் சுகாதாரம் தொடர்பிலும் பாரதூரமான பிரச்சினை உருவாகியுள்ளது.
அப் பிரச்சினைகள் சிலநேரங்களில் மோதல்கள் வரை வளர்ச்சியடைவதையும் நாம் கேள்விப்படுகின்றோம்.சிறைச்சாலைகள் திணைக்களத் தரவுகளின்படி, சிறைச்சாலையிலுள்ள கைதிகளில் சுமார் 75 சதவீதம் பேர் இன்னும் வழக்கு நடவடிக்கைகள் முடிவடையாததன் காரணமாகச் சிறையிலடைக்கப்பட்டவர்களாவர்.
அதேபோன்று மற்றுமொரு பிரிவினர் தமக்கு விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்தப் பணமில்லாததன் காரணமாக மீளவும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அது சிறைச்சாலைப் பிரச்சினையைத் தாண்டிய, “வறுமையினால் தண்டனை அனுபவிக்கும்” பிரச்சினையாகச் சுட்டிக்காட்டப்படலாம்.
பணமுள்ள நபர்கள் பிணை பெற்று வெளியே செல்கையில், பிணை வைப்பதற்குப் பணமில்லாததன் காரணமாக மற்றுமொரு குழுவினர் சிறைக்குள்ளேயே தங்கியிருக்க நேரிடுவது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.
எனவே, பிணைச் சட்டத்திலுள்ள பலவீனங்கள், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளின் தாமதங்கள், அரச மதிப்பீட்டு அறிக்கைகளின் தாமதங்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளைத் தேடுவதும், அபராதம் செலுத்த முடியாமல் சிறையிலடைக்கப்படும் நபர்களுக்கு மாற்றுத் தண்டனை முறையொன்றை அல்லது பொருத்தமானவாறு அவர்களைச் சமூகமயப்படுத்தும் முறையொன்றை வகுப்பதும் காலத்தின் முக்கியத்துவம் மிக்கதென வலியுறுத்துகின்றோம்.
அதற்கமைய, வழக்குகள் தேங்குவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நிரந்தரத் தீர்வுகளைத் தேடுவதும், சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கும் அத்துடன் சிறைச்சாலைக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய நிரந்தரத் தீர்வுகளை உடனடியாக முன்மொழிவதற்கும் நிலையியற் கட்டளைகள் 100 – 110 இன் படி பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.




