மகனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவூதி தூதரகத்திடம் மனு கையளித்த அனோஜனின் தாய்
சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், அவரது உயிரைப் பாதுகாக்குமாறு கோரி கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு இன்று சென்று மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை – நற்பிட்டிமுனையில் இருந்து வருகை தந்த அனோஜனின் குடும்பத்தினருடன், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
தூதரக அதிகாரிகளிடம் அனோஜனின் தாயாரும் குடும்பத்தினரும் கதறி அழுதபடி மனுவைக் கையளித்ததுடன், மனிதநேய அடிப்படையில் அவருக்கு மன்னிப்பு வழங்கி தாய்நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்தனர்.
தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்று ஒன்பது மாதங்களேயான நிலையில், சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட மதம் சார்ந்த கருத்து தொடர்பாக அனோஜன் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் சவூதி நீதிமன்றத்தால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின்போது அந்தத் தண்டனை திடீரென மரணதண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றன.
தீர்ப்பு தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்து ஆவணங்கள் கிடைத்தவுடன், 30 நாள்களுக்குள் சவூதி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளும் ஆயத்தமாக்கப்பட்டு வருகின்றன.





