செம்மணி புதைகுழி குறித்து ஐ.நாவுக்கு அவசரக் கடிதம்
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சுயாதீன சர்வதேச விசாரணை உள்ளிட்ட ஏழு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
2025 பெப்ரவரியில் கண்டறியப்பட்ட இந்த இடத்தில், சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட 454-க்கும் மேற்பட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உள்நாட்டுப் பொறிமுறைகளில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதால், ‘மினசோட்டா நெறிமுறைக்கு’ அமைவாக சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வு மற்றும் மரபணு (DNA) பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சாட்சிகள், குடும்பங்கள் மற்றும் நிபுணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய யாழ்ப்பாணத்தில் ஐ.நா-வின் நேரடி அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் சான்றுகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மீதான பயம் மற்றும் நம்பிக்கையின்மை காரணமாகவே பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உரிமை கோர முன்வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள கத்தோலிக்க சபை, பழிவாங்கும் நோக்கம் இன்றி உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவே இந்த அவசரத் தலையீட்டைத் தாம் கோருவதாகத் தெரிவித்துள்ளது.




