ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்புரிமை: ஆஸ்திரேலியா தீவிர பிரச்சாரம்
ஐ.நா.சபையின் மிக சக்தி வாய்ந்த பாதுகாப்பு சபையில் (UNSC) இரு ஆண்டு கால தற்காலிக உறுப்பினராவதற்கான ஆஸ்திரேலியாவின் பிரச்சாரத்தைப் பிரதமர் Anthony Albanese அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள்
செயற்கை நுண்ணறிவின் (AI) அதிவேக வளர்ச்சி உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பதில் ஆஸ்திரேலியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
ஐநா பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல உலகத் தலைவர்கள் நியூயார்க்கில் கூடியுள்ள நிலையில், இரண்டு வெற்றிடங்களில் ஒன்றை ஆஸ்திரேலியா கைப்பற்றுவதற்கு “மிகவும் வலுவான நிலையில்” உள்ளதாகக் கூறிய பிரதமர், பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகச் சிறப்பு காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சாரத் தொடக்கத்தின் போது, நியூயார்க்கிற்கான ஆஸ்திரேலியாவின் அடுத்த தூதராக (Consul-General) நியூஸ் கார்ப் (News Corp) நிறுவனத்தின் முன்னாள் மூத்த நிர்வாகி ஷியோபான் மெக்கென்னாவை (Siobhan McKenna) , Anthony Albanese அறிவித்தார்.
தற்போதைய தூதர் ஹீதர் ரிடவுட்டின் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைவதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அஞ்சல் துறையின் தலைவராக இருக்கும் மெக்கென்னா அந்தப் பொறுப்பை ஏற்பார்.
2029-ஆம் ஆண்டிற்கான இரு தற்காலிக இடங்களுக்கு இதுவரை ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
இதற்கான இரகசிய வாக்கெடுப்பு 2028-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெறும். இதில் வெற்றிபெற ஐநா பொதுச் சபையின் 193 உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு (குறைந்தது 128) ஆதரவு தேவை.
ஆஸ்திரேலியா கடைசியாக 2014-இல் இந்த தற்காலிகப் பதவியை வகித்தது. அப்போது உக்ரைன் வான்வெளியில் மலேசிய ஏர்லைன்ஸ் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் பன்னாட்டு விசாரணை நடத்த ஆஸ்திரேலியா தீவிர நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு வீட்டோ (Veto) அதிகாரம் இருப்பதால், உலகளாவிய நெருக்கடிகளைக் கையாள்வதில் அமைப்பின் செயல்பாடு தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்த அமைப்பில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை ஒப்புக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில், ஆஸ்திரேலியா போன்ற நடுநிலை நாடுகள் ஐநாவில் அங்கம் வகிப்பது வன்முறையற்ற, விதிகள் சார்ந்த உலகை உருவாக்க உதவும் என்று தெரிவித்தார்.




