நேபாளத்தில் 800 வெளிநாட்டவர்கள் உட்பட 1500 பேர் மாயம்
இமயமலைப் பகுதியில் பாறைகளும் சேறும் நிறைந்த பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து உருவான பேரழிவுத் திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் பகுதிகளில் 800 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 1,500 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
லாசாவையும் (Lhasa) காத்மாண்டையும் இணைக்கும் மலையேற்றப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகம் நடமாடும் மலைப் பகுதியில் புதன்கிழமை இப்பேரழிவு ஏற்பட்டது. துண்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 165 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தேடுதல் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என நேபாளக் காவல் துறை செய்தித் தொடர்பாளர் அபி நாராயண் கப்லே தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் மட்டும் காணாமல்போன 826 பேரில் 500-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் ஆவர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 177 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 63 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேர், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேர் மற்றும் கனடாவைச் சேர்ந்த 25 பேர் அடங்குவர்.
திபெத்தின் கிராங் (Gyirong) மாவட்டத்தில் 260 வெளிநாட்டவர் உட்பட 558 பேரைக் காணவில்லை எனச் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் 68 வயதான கேஷவ் பிரசாத் பரால் கூறுகையில், “எங்களை நோக்கிப் பாரிய சேற்று வெள்ளம் சீறிக்கொண்டு வந்தது. என் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு மாடிக்குச் செல்ல முயன்றேன். ஆனால், சேற்று வெள்ளம் அவளை அடித்துச் சென்றுவிட்டது. நான்கு மணி நேரத்திற்குப் பிறகே என்னை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். என் மனைவி இன்னமும் அந்தச் சேற்றுக்குள் தான் புதையுண்டு கிடக்கிறாள்” என உருக்கமாகத் தெரிவித்தார்.
மற்றொரு நபர், தான் வேலை செய்த வீடு கண்முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது, மாமரத்தைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்ததாகக் கூறினார்.
நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவே காரணம்
இப்பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான அதிர்வு நிலநடுக்கம் அல்ல என்றும், பனிப்பாறை பாறைகளுடன் உடைந்து விழுந்ததால் ஏற்பட்ட அதிர்வே அது என்றும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது 5,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா சேதங்களை நேரில் ஆய்வு செய்யக் களமிறங்கியுள்ளார்.





