அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 12 பேர் பலி – 54 பேர் காயம்
ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ மிகக் கடுமையாகப் பரவி வரும் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர் சயீத் சயவுத் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், ஜிஜேல் (Jijel) மாகாணத்தில் 5 பேரும், பெஜாயா (Bejaia) மாகாணத்தில் 4 பேரும், டிசி உஸு (Tizi Ouzou) மாகாணத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெஜாயா மாகாணத்திலுள்ள சூக் எல் தெனைன் (Souk El Thenine) மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் சயவுத், அங்குத் தீக்காயங்கள் மற்றும் புகை சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு 54 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
புதன்கிழமை நாடு முழுவதும் 154 இடங்களில் காட்டுத் தீ உருவாகியிருந்ததை அல்ஜீரியப் பேரிடர் மீட்புக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். பெஜாயா மாகாணத்தில் மட்டும் 36 இடங்களில் தீப்பற்றி எறிந்த நிலையில், அதில் 18 இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அல்ஜீரியா மற்றும் அண்டை நாடான துனிசியாவில் வீசி வரும் கடுமையான வெப்ப அலையே இந்த காட்டுத் தீ பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
கோடைகால உச்சத்தின்போது அல்ஜீரியாவில் காட்டுத் தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக மாறியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் தீ விபத்துகளால் 6 பேர் உயிரிழந்திருந்தனர்.
மத்திய தரைக்கடல் கடலோரக் காட்டுப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி, பருவநிலை மாற்றம், தீவிரமான வெப்ப அலை மற்றும் பலத்த காற்று ஆகியவை இத்தகைய பாரிய தீ விபத்துகளுக்கு முதன்மைச் சூழ்நிலைகளாக அமைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.




