செய்தி

சமாதான தூதுவராக ஈரான் பறந்தார் கத்தார் பிரதமர்

சமாதான தூதுவராக ஈரான் பறந்தார் கத்தார் பிரதமர்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள பொருளாதார போருக்கு மத்தியில், இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் தூதரகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் முயற்சியாகக் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி வியாழக்கிழமை தெஹ்ரான் சென்றுள்ளார்.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கிய போர் ஆறு மாதங்களை நெருங்கும் வேளையில், கத்தார் பிரதமர் ஈரானிய அதிகாரிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை, ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளார்.

உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பாதையாகத் திகழும் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இழுபறி நீடிக்கிறது.

போர் தொடங்குவதற்கு முன் நாளொன்றுக்கு 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் கடந்து சென்ற இந்த வழியில், தற்போது 50 லட்சம் பேரல்கள் மட்டுமே செல்கின்றன.

பிப்ரவரி 28 முதல் இதுவரை ஹோர்முஸ் பகுதியில் 70 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 19 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை காலையும் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகித் தீப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஈரான் – ஓமான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மற்றும் வருவாயைப் பகிர்வது தொடர்பாக ஈரானும் ஓமானும் ஒப்புதலுக்கு வந்துள்ளதாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) தெரிவித்தது. இருப்பினும், ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என உயர்மட்ட ஈரானிய ஆதாரம் ஒன்று தெரிவித்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது.

அமெரிக்கா தனது தடைகளை நீக்கி, ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகையை விலக்கிக் கொள்ளும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடியே இருக்கும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதேவேளையில், வர்த்தகப் பங்காளிகள் மீது தடைகளை விதித்து ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி