அரசியல் கட்சியாக மாறுமா கரப்பான்பூச்சி இயக்கம்?
” எமது அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. இது ஒரு மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.” – என்று நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு ,
“மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில், சிஜேபி அமைப்பின் முதலாவது மையக் குழு கூட்டம் ஆகஸ்ட் 5-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்குமாறு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எங்களது அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, எங்களது அமைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது, மக்கள் நலனுக்காக நாம் கையில் எடுக்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகளைக் கண்டறிவது மற்றும் இயக்கத்திற்கான தொலைநோக்கு வரைபடத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கவுள்ளோம்.
இந்த அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. இது ஒரு மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சிஜேபி-ஐ ஓர் அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான எந்தவொரு தேவையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” – என்றார் அபிஜித் திப்கே




