கணவனை கொலைசெய்து சடலத்தை மலசலக்கூட குழிக்குள் வீசிய மனைவி: மன்னாரில் கொடூரம்!
குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூடக் குழியில் வீசிய பெண்ணொருவர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் மூர் வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவு கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனைத் தாக்கிக் கொலை செய்துள்ளார்.
பின்னர், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சடலத்தைத் துண்டு துண்டுகளாக வெட்டி, உறைகளில் (உறப்பை) பொதி செய்து வீட்டின் மலசலகூடக் குழியினுள் போட்டு மறைத்துள்ளார்.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக மேற்படி பெண் நேற்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் அவரைச் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றதுடன், மன்னார் நீதிவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் மலசலகூடக் குழியிலிருந்து சடலப் பகுதிகளை மீட்டனர்.
உயிரிழந்தவர் மன்னார், வங்காலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரைக் கொலை செய்த அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த இரண்டு மாதங்களாக குறித்த பகுதியில் எவ்வித பதிவுகளும் இன்றி வாடகைக்கு வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு இவ்வளவு கொடூரமான கொலையில் முடிந்தமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.





