அமெரிக்கா அதிரடி – பிரேசில் மீது 25 சதவீதம் வரிவிதிப்பு
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் தனது சுங்க வரிக் கொள்கையை மறுசீரமைத்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் உலகெங்கிலும் வர்த்தகப் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய சுங்கவரி உத்தியின் கீழ் இலக்கு வைக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் ஆனது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தியானது, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க அதிகாரம் அளிக்கும் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 இன் கீழ் விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிவிதிப்பானது வரும் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த வரிவிதிப்பின் கீழ் இந்தியா மற்றும் சீனா முதல் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென் கொரியா வரையிலான நாடுகள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




