ரஷ்யாவுக்கு புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா: இந்தியாவுக்கும் ஆபத்து
ரஷ்யாவின் எரிசக்தி துறை, தனிநபர்கள் மற்றும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் நிழற்படை (shadow fleet) கப்பல்களை இலக்காகக் கொண்டு, அந்நாட்டின் மீது தடைகளை விதிக்கும் புதிய சட்டமூலத்துக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டமூலமானது, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 262 வாக்குகளும், எதிர்ப்பாக 159 வாக்குகளும் பதிவாகின.
ஏற்கனவே ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்க மேலவையில் (Senate) இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.
இனி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஒப்புதலுக்காகவும் கையெழுத்துக்காகவும் அனுப்பப்படவுள்ள இச்சட்டம், அமுலுக்கு வரும் பட்சத்தில் இந்தியா மீது கணிசமான வரிச்சுமையை ஏற்படுத்தக்கூடும்.
டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையிலும், கடந்த ஆண்டை விட இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நிலையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தேசிய நலனைக் கருத்தில் கொண்டு சில நாடுகளுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கும் அதிகாரம் சட்டப்படி அமெரிக்க ஜனாதிபதிக்கு உள்ளது.




