அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்பின் சகாக்கள் அதிருப்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த ஒப்பந்தம் வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கிலான டாலர் பணத்தை வீணடிப்பதாகவும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், லெபனான் உட்பட அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இருந்து மூடப்பட்டிருந்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
அத்துடன், ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக $300 பில்லியன் (30,000 கோடி டாலர்) நிதி வழங்குவதற்கான பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தை உருவாக்க வாஷிங்டன் உறுதியளித்துள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தில் “அணு ஆயுதங்களை வாங்கவோ அல்லது உருவாக்கவோ மாட்டோம்” என்ற ஈரானின் வாக்குறுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
டிரம்பின் கட்சியில் அவரை விமர்சிக்கும் செனட்டர் பில் காசிடி (Bill Cassidy), இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடந்த பல தசாப்தங்களில் செய்யப்பட்ட மிக மோசமான வெளியுறவுக் கொள்கை தவறு என்று கடுமையாக சாடியுள்ளார்.
“இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் புத்தம் புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கப் போகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
கென்டக்கி மாநில குடியரசுக் கட்சி செனட்டரான தாமஸ் மாசி (Thomas Massie), $300 பில்லியன் உதவித் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தத் தொகை அமெரிக்க நாடாளுமன்றம் (Congress) ஆண்டுதோறும் சாலைகள் மற்றும் பாலங்களுக்காக செலவிடும் தொகையை விட ஐந்து மடங்கு அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்பின் முதல் ஆட்சியில் ஜனாதிபதியாக பதவி வகித்த மைக் பென்ஸ் (Mike Pence) கூறுகையில்,
” இந்த அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஒபாமா-ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது நிர்வாகம் நிராகரித்த அதே சமரசக் கொள்கையை (Appeasement) நினைவூட்டுகிறது.
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தையும், ஏவுகணை திட்டத்தையும் கைவிடுவதற்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆதரவை நிறுத்துவதற்கும், ஜலசந்தியை திறப்பதற்கும் வழிவகை செய்யும் ஒரு ஒப்பந்தத்தையே அமெரிக்கா பின்தொடர வேண்டும்.
அது நடக்கவில்லை எனில், நமது ஆயுதப் படைகள் இந்த வேலையை நமது நிபந்தனைகளின்படி முடிப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்,” என்று பென்ஸ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




