பப்புவா நியூ கினியாவில் உள்ள அலுவலகத்தை மூடும் தைவான் – சீனா பாராட்டு
பப்புவா நியூ கினியாவில் உள்ள தைவானின் அலுவலகத்தை மூட அந்நாடு முடிவு செய்துள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை பெய்ஜிங் பெரிதும் பாராட்டுவதாகவும் அறிவித்துள்ளது.
பசிபிக் பிராந்தியம் நீண்ட காலமாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் இராஜதந்திரப் போட்டி நிலவும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
இந்த தகவலை உறுதிப்படுத்த ரொய்டர்ஸ் பப்புவா நியூ கினியாவின் வெளியுறவு அமைச்சகத்திடம் வினவியுள்ள நிலையில், அவ் அமைச்சகம் பதிலளிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், பப்புவா நியூ கினியாவில் உள்ள தைபே பொருளாதார அலுவலகத்தை மூடுவதற்கான அந்நாட்டு அரசாங்கத்தின் முடிவை சீனா “மிகவும் பாராட்டியுள்ளது” என்று கூறினார்.
“தங்கள் முக்கிய அக்கறைகள் மற்றும் அடிப்படை நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான மூலோபாய உறவை கூட்டாக மேம்படுத்துவதற்கும், பப்புவா நியூ கினியாவுடன் தொடர்ந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




