இந்தியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டை பயன்படுத்த தவறிய இலங்கை
“புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சிறப்பான வெளிவிவகாரக் கொள்கை இல்லை என்பது புலனாகிறது,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“ டெல்லியில் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உட்பட முக்கிய நாடுகள் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
எனினும், இலங்கை சார்பில் இந்த உச்சி மாநாட்டில் எவரும் பங்கேற்கவில்லை. மாநாட்டைப் பற்றிய எந்தவொரு கவனமும் இன்றிச் செயல்பட்டுள்ளனர்.
புதிய அபிவிருத்தி வங்கி ஒன்றை பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பிக்கவுள்ளது. இது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்றதொரு அமைப்பாகச் செயற்படும். எனவே, அவ்வாறான மாநாடுகளில் பங்கேற்று நாட்டுக்குப் பயனளிக்கக் கூடிய வாய்ப்பக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, உகண்டா, நைஜீரியா ஆகிய நாடுகள் கூட இதில் பங்கேற்றிருந்தன.
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திடம் முறையான வெளிவிவகாரக் கொள்கை இல்லை என்பதற்கு இதுவே சான்றாகும். அரசாங்கத்தின் இந்த அலட்சியப்போக்கு நாட்டுக்கே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார்.




