சட்டங்களை மீறும் நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க முடியாது : இஸ்ரேல்–ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை நிறுத்த ஸ்பெயின் வலியுறுத்தல்
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகிறது என்று குற்றம்சாட்டி, ஐரோப்பிய ஒன்றியம்–இஸ்ரேல் கூட்டமைப்பு ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரியுள்ளார்.
அண்டலூசியாவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றிய அவர், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஸ்பெயின் அரசு சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
“சர்வதேச சட்டங்களை மீறும் நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.
இதனிடையே, ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் இணைந்து, இஸ்ரேலுடன் உள்ள இந்த ஒப்பந்தத்தை அடுத்த ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கோரி, ஐரோப்பிய ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளன.
2000 ஆம் ஆண்டில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. காசா பகுதியில் நிலவும் சூழ்நிலையைக் காரணமாகக் கொண்டு, 2024 இல் இந்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஏற்கனவே கோரியிருந்தன.
மேலும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களையும் ஸ்பெயின் பிரதமர் விமர்சித்துள்ளார். 2024-ல் பலஸ்தீனத்தை அங்கீகரித்ததிலிருந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசுக்கு எதிரான அவரது விமர்சனம் மேலும் அதிகரித்துள்ளது.




