போர் தொடர்பான பதிவுகள் – அமெரிக்க–குவைத் பத்திரிகையாளர் குவைத்தில் கைது
போர் தொடர்பான சமூக ஊடக பதிவுகளுக்காக அமெரிக்க–குவைத் பத்திரிகையாளர் அகமது ஷிஹாப்-எல்டின் குவைத் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகக் கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
41 வயதான ஷிஹாப்-எல்டின், குவைத்தில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்க சென்றிருந்த நிலையில், மார்ச் 2-ஆம் திகதிக்குப் பின்னர் அவர் இணையத்தில் எந்தப் பதிவும் இடவில்லை மற்றும் பொதுவெளியிலும் தோன்றவில்லையென நியூயோர்க்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) தெரிவித்துள்ளது.
அவர்மீது தவறான தகவல்களைப் பரப்புதல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் மற்றும் கைபேசியை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் CPJ தெரிவித்துள்ளது.
இதனிடையே, குவைத் அரசு மார்ச் 15 அன்று புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அந்த சட்டத்தின் கீழ், இராணுவ அமைப்புகளின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும்.
வளைகுடா பகுதியில், தாக்குதல் நடந்த இடங்களைப் படம் பிடித்தது அல்லது அதைப் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக கூறி நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 28 க்குப் பிறகு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், ஈரான் தனது அண்டை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ மற்றும் எரிசக்தி தளங்களை தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




