சுரேஷ் சலே சாகும்வரை சிலர் காத்திருப்பு: மனைவி கவலை
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று அவரது மனைவி மனோரி சலே கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் இன்று சென்று சுரேஷ் சலேவை பார்வையிட்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“எனது கணவர் சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரெனக் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்குப் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளின் முடிவில், அவருக்கு நெஞ்சுவலி ஏற்படக்கூடும் என தெரியவந்தது.
சுரேஷ் சலேவின் நிலை குறித்து அமைச்சர் என்ன கூறினாலும், இங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே அவரது உண்மையான உடல்நிலை தெரியும்.
சுரேஷ் சலே தற்போது எவ்விதத்திலும் நல்ல நிலையில் இல்லை. நாளுக்கு நாள் அவரது உடலில் பல்வேறு புதிய மருத்துவச் சிக்கல்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.
நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர் உயிரிழக்கும் வரை காத்திருக்கின்றனர்.
எனினும், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக சுரேஷ் சலே ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை எந்தவொரு சூழ்நிலையிலும் கைவிடப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.” – என்று சுரேஷ் சலேவின் மனைவி தெரிவித்தார்.




