22 ஐ ஆயுதமாக்கி மக்களை பழிவாங்காதீர்: ஆளுங்கட்சி கோரிக்கை
அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, “22-ஆவது திருத்தத்திற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் என்ன நேரும்?” என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியதாவது:
“அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலத்திற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு உள்ளது.
அரசியல் கட்சிகள் 22-ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதால் பொதுமக்களுக்கு நேரடிப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சட்டத்தரணிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டாலும்கூட அது வழக்கு விசாரணைகளில் மட்டுமே தாமதத்தை உண்டாக்கும்.
ஆனால், 22-ஆவது திருத்தத்தை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் அது நேரடியாகப் பொதுமக்களைப் கடுமையாகப் பாதிக்கும். எனவே, அத்தகையதொரு முடிவை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.




