நேபாளம் வெள்ள அனர்த்தம்: பலி எண்ணிக்கை 1,118 ஆக உயர்வு
நேபாளத்தில் குறைந்தது 1,118 பேரைக் பலிகொண்டதும், 3,900-க்கும் மேற்பட்டோரைக் காணாமல் போகச் செய்ததுமான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனதாகப் பதிவான சுற்றுலாப் பயணிகள் சிலர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதிஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, இதுவரை 324 வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 39 நாடுகளைச் சேர்ந்த சுமார் 590 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதாகவும் நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன சுற்றுலாப் பயணிகள் தொடர்பு
முந்தைய நாள் இரவில் 5 ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பேரிடரில் காணாமல் போன ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 43 இலிருந்து 38 ஆகக் குறைந்துள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பலாவுவில் (Palau) நடைபெற்று வரும் பிராந்திய உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அல்பானீஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தத் துயரத்திற்கு மத்தியிலும் சில நேர்மறையான செய்திகளைக் காண்கிறோம். இன்று மேலும் 5 ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களிலும் நல்ல செய்திகள் வரும் என நம்புகிறோம். அதிகாரிகளுடன் இணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
காத்மாண்டுவில் தஞ்சம் புகும் பாதிக்கப்பட்ட மக்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலர் பேரழிவிலிருந்து தப்பித்து நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.




