வரலாற்று சாதனை படைத்த மோடிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!
இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வகிக்கும் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், இந்த மைல்கல் சாதனை என்பது இந்திய மக்கள் அவரது தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, மோடியின் தலைமையின் கீழ் நாடு அடைந்துள்ள மாற்றத்தையும் அங்கீகரித்துள்ளார்.
இக்காலக்கட்டத்தில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றியதன் மூலம் இலங்கை பல நன்மைகளைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக இலங்கை எதிர்கொண்ட சவாலான காலங்களில் இந்தியா வழங்கிய தொடர்ச்சியான நட்பு மற்றும் ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.





